காவிரி ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

நெரூர் காவிரி ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-02-25 23:00 GMT
கரூர்,

கரூர் அருகே நெரூர் வடபாகம் ஒத்தக்கடையில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொறுப்பும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குடும்பத்தில் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் என பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவரது திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் நகரில் நீண்ட காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த நிலையை மாற்றி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருமாநிலையூர், செல்வாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 நபர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நெரூர் ஒரு விவசாய பகுதி. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் காலத்திற்கு முன்பே நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தடையின்றி நீர்பாசனம் செய்யப்பட்டது. நெரூருக்கும், திருச்சி மாவட்டம் உன்னியூருக்கும் இடையே காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட கடந்த 1991-1996-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தற்போது நெரூர் காவிரி ஆற்றில் 1 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரும் இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறார். நெரூர்-உன்னியூர் இடையே கதவணையுடன் கூடிய உயர் மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 216 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, நுகர்வோர் கண்காணிப்பு உறுப்பினர் காளியப்பன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூரில் பழைய திண்டுக்கல் சாலையில் இருந்து பண்டரிநாதன் கோவில் வரை அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்