இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம்

கடலூர் கோ-ஆப்டெக்சில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டத்தை கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்.

Update: 2018-02-25 22:45 GMT
கடலூர்,

கடலூரில் சிதம்பரம் சாலையில் உள்ள முல்லை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கடலூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சேர்த்து 18 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம்’ அடுத்த மாதம்(மார்ச்) 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் கடலூர் மண்டலத்துக்கு இந்த ஆண்டு ரூ.3½ கோடியும், அதில் முல்லை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.60 லட்சமும் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிய ரகங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டும் புதுவரவாக குறைந்த விலையில் சேலம் பட்டுப்புடவைகள், மென் பட்டுப்புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், குர்த்தீஸ், லினன், காட்டன் சட்டைகள், குல்ட் மெத்தை விரிப்புகள், போம் டெக்ஸ்டைல் டவல்கள், அச்சிட்ட மீரட் மற்றும் ஜெய்ப்பூர் போர்வைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விழாவில் முல்லை கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாளர் கல்யாணசுந்தரம், முதுநிலை மண்டல மேலாளர் கோபால், துணை மண்டல மேலாளர் ரமேஷ், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் ரக மேலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்