கோவை ரேஸ்கோர்சில் ரூ.2.34 கோடி செலவில் புதிய கட்டிடம்

கோவை தாசில்தார் அலுவலகத்துக்கு ரூ.2.34 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

Update: 2018-03-08 22:30 GMT
கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய வளாகத்தில் தெற்கு தாசில்தார் அலுவலகம், உணவு பங்கீட்டு அலுவலர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அந்த கட்டிடம் நூற்றாண்டு பழமையான கட்டிடம் என்பதால் அதற்கு பதில் வேறு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது தெற்கு தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடத்துக்கு அருகில் 12 ஆயிரத்து 701 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில், தாசில்தார் அறை மற்றும் அலுவலகம், கணினி அறை, பதிவறை அறைகள், விசாரணை அறை ஆகியவை கட்டப்படுகின்றன.

முதல் தளத்தில் தாலுகா வழங்கல் அதிகாரி அலுவலகம், 60 பேர் உட்காரும் வகையில் கருத்தரங்க கூடம், எழுது பொருள் வைப்பறை ஆகியவை அமைக்கப்படுகின்றன. ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்பில் இந்த புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் வலுவாக இருப்பதால் அதை பராமரித்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்தில் தெற்கு தாசில்தார் அலுவலகம், தாலுகா வழங்கல் அதிகாரி அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்படும். தற்போது உள்ள பழைய கட்டிடத்தில் வெளியில் வாடகையில் செயல்படும் சில அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்படும்.

புதிய தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் வடக்கு திசை நோக்கி இருக்கும். இந்த அலுவலகத்துக்குள் வருவதற்கான கேட் ஹூசூர் சாலையில் அமைக்கப்படும். புதிய கட்டிடம் கட்டப்படும் இடத்தில் உள்ள புதர்கள், பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு தரை சமப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதன்பின்னர் அஸ்திவாரம் போடப்படும். அந்த பகுதியில் பாறை நிறைந்துள்ளதால் அஸ்திவாரம் அதிக ஆழம் தோண்ட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்