வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.52 லட்சம் மோசடி

ஆண்டிப்பட்டியை சேர்ந்த என்ஜினீயரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி செய்த மும்பையை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-03-08 22:45 GMT
தேனி,

ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் ரமேஷ் (வயது 30). என்ஜினீயர். இவர், சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர், சொந்த ஊருக்கு வந்த நிலையில், ஆன்லைன் மூலம் வேலை தேடியுள்ளார்.

அப்போது ஆன்லைன் மூலம் மும்பையை சேர்ந்த ஜோர்டான் ரீவ்ஸ், ராகவ் ஆகிய 2 பேர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தரம் சரிபார்ப்பு ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

மின்னஞ்சல் மூலம் இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். வேலை வாங்கிக் கொடுக்கவும், கனடா செல்வதற்கு விசா வாங்கி தருவதற்கும் பணம் கேட்டுள்ளனர். அதை நம்பிய ரமேஷ் லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர், வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறியதுடன், மேலும் பணம் கேட்டுள்ளனர். அதற்கும் அவர் வங்கி மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு பல தவணைகளாக ரூ.52 லட்சம் பணத்தை ரமேஷ் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த நபர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ரூ.52 லட்சம் மோசடி செய்ததாக ஜோர்டான் ரீவ்ஸ், ராகவ் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்துள்ளார். வழக்கு தொடர்பாக இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்