அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள்

சமூக கட்டமைப்புகளில் இருந்து வெளியே வந்து அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி சாதனை படைத்து வருகிறார்கள் என்று தேனியில் நடந்த மகளிர் தினவிழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசினார்.

Update: 2018-03-08 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்கு காரணம் பெண்களின் உரிமைகள், பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, பெண் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை விழிப்புணர்வு மூலம் வெளிப்படுத்துவதற்காகவே. பெண்கள் அவர்களுக்கான சமூக கட்டமைப்புகளில் இருந்து தற்போது வெளியே வந்து, அனைத்து துறைகளிலும் பணியாற்றி, சாதனை படைத்து வருகிறார்கள். பெண்கள் பணியாற்றாத துறைகளே இல்லை என்ற நிலை தற்பொழுது உள்ளது.

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஆண், கல்வி பயின்றால் அவருக்கு மட்டுமே பயன் தரும். ஆனால், ஒரு பெண் கல்வி பயின்றால் ஒரு குடும்பமே கல்வி பயின்றதற்கு சமம். பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக, பணியாளராக, வழிகாட்டிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

பெண்கள் குறைந்தபட்ச கல்வி கற்பதன் மூலம் ஏதேனும் தொழில் சார்ந்த கல்வி பயின்று சுயமாக தொழில் தொடங்கி, நிலையான வருவாயை ஈட்ட முடியும். இதன் மூலம் தன்னம்பிக்கையுடன், சுயமாக வாழ வழி ஏற்படும். பெண்கள் மற்ற பெண்களுக்கு உதவுவதன் மூலமே பெண்களின் முன்னேற்றம் எளிதில் சாத்தியமாகும்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், அரசு பெண் அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்