சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

குமரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருப்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கடற்கரை வெறிச்சோடியது.

Update: 2018-03-08 22:45 GMT
கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, கடலில் நீராடி, கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு, பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்புவார்கள்.

குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையும், கோடை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். பிற நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும்.

தற்போது, குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பகல் வேளையில் அனல் காற்றும் வீசத்தொடங்குகிறது. இதனால், பொதுமக்கள் சாலையில் நடமாட சிரமப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

சுற்றுலாதலமான கன்னியாகுமரியிலும் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக காணப்படுகிறது. காலையில் சூரிய உதயம் தொடங்கியவுடன் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. மாலை வரை இதே நிலை நீடிக்கிறது. இதனால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 தற்போது, பிளஸ்–1, பிளஸ்–2 தேர்வுகள் நடைபெற்று வருவதால், குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது. இதனால், மதியம் வேளையில் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.  

மேலும் செய்திகள்