சென்னையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகனம்

சென்னையில் தற்கொலை செய்து கொண்ட திருவிடைமருதூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2018-03-08 23:15 GMT
திருவிடைமருதூர்,

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார்(வயது 33). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மேலையூர் கொத்துக்கோயில் ஆகும். கடந்த 6-ந் தேதி நள்ளிரவு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான மேலையூர் கொத்துக்கோயில் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. சதீஷ்குமாரின் உடலுக்கு உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுற்றுப்புற கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் திரளான போலீசார் கொத்துக்கோயில் கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். சதீஷ்குமாரின் உறவினர்களும், கிராம மக்களும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சதீஷ்குமாரின் உடலை எடுத்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் அதற்கு வாய்ப்பில்லை என்று மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சதீஷ்குமாரின் உடலுக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின் அங்குள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்