மோட்டார் சைக்கிளில் சென்ற எங்களை இன்ஸ்பெக்டர் 3 முறை எட்டி உதைத்தார் பலியான உஷாவின் கணவர் பேட்டி

மோட்டார் சைக்கிளில் சென்ற எங்களை இன்ஸ்பெக்டர் காமராஜ் 3 முறை எட்டி உதைத்தார் என்று உஷாவின் கணவர் ராஜா கூறினார்.

Update: 2018-03-08 23:15 GMT
திருச்சி,

எனக்கும், உஷாவுக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. உஷாவின் தோழிக்கு காரைக்காலில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் திருச்சியில் நடந்தது. திருமணத்துக்கு காரைக்கால் செல்ல முடியாது என்பதால் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பதற்காக நானும், எனது மனைவியும் சிறிய கிரைண்டர் ஒன்றை பரிசாக கொடுப்பதற்காக வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் வைத்துக்கொண்டு வந்தோம். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, இன்ஸ்பெக்டர் காமராஜ் எனது மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார். நான் சற்று தூரம் சென்று வண்டியை நிறுத்தினேன்.

உடனே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் எனது சட்டையை பிடித்து, இவ்வளவு தூரம் தள்ளி வந்து தான் வண்டியை நிறுத்துவியா? என்று திட்டிவிட்டு சென்றார். உடனே நானும் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றேன். ஆனால் அவர் என்னை கொலை குற்றவாளிபோல மொபட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் துரத்தி வந்தார். அப்போது தொடர்ந்து 2 முறை எனது மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார்.

நான் சுதாரித்து கொண்டேன். ஆனால் அந்த இடம் இருட்டாக இருந்ததால் நான் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவரிடம் ஏன்? சார் இப்படி செய்கிறீர்கள் என்று கூறிக்கொண்டே சென்றேன். ஆனால் அவர் மீண்டும் உதைத்தபோது என்னால் சுதாரிக்க முடியவில்லை. நானும், எனது மனைவியும் கீழே விழுந்தோம். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து என்னை தூக்கினார்கள். உடனே எனது மனைவியை தூக்கி பார்த்தபோது, அவர் சுயநினைவு இன்றி இருந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் என்னையும், எனது மனைவியையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எனது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். முதலில் என்னை வழிமறித்த இன்ஸ்பெக்டர் அந்த இடத்திலேயே பணம் கேட்டு இருந்தால்கூட கொடுத்து இருப்பேன். எனது மனைவியின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தி கைதான அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கீழே விழுந்து காயமடைந்த எனக்கு முதலுதவி சிகிச்சைக்கூட அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் செய்திகள்