நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து காயத்துடன் மீட்கப்பட்ட தாய்லாந்து சிப்பந்தி சாவு

நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து காயத்துடன் மீட்கப்பட்ட தாய்லாந்து சிப்பந்தி உயிரிழந்தார். அந்த கப்பலில் தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிகிறது.

Update: 2018-03-08 22:48 GMT
மும்பை,

சிங்கப்பூரில் இருந்து 7,860 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ‘மெர்ஸ்க் ஹோனம்’ என்ற சரக்கு கப்பல் லட்சத்தீவில் இருந்து 570 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு திடீரென தீப்பிடித்தது.

அந்த கப்பலில் 27 சிப்பந்திகள் இருந்தனர். கப்பல் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் சிப்பந்திகள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கடலில் குதித்தனர். அவர்களில் 23 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். 4 பேர் மாயமாகி விட்டனர். அவர்களில் ஒருவர் இந்திய சிப்பந்தி ஆவார்.

அவரது பெயர் சகீம் ஹெக்டே என்பது தெரியவந்து உள்ளது. கப்பலில் அவர் சமையல்காரராக இருந்து உள்ளார்.

இந்தநிலையில், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்து இருந்தார். அவர் சிகிச்சைக்காக இலங்கையின் கொழும்புக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். இதை கப்பல் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த சிப்பந்தி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மற்ற சிப்பந்திகள் 22 பேரும் ஏ.எல்.எஸ்.செராஸ் கப்பலில் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே நடுக்கடலில் தீப்பிடித்த அந்த கப்பலில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. கப்பலின் மேற்பரப்பில் இருந்து 25 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழும்பி கரும்புகையை கக்கியபடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தீயை அணைக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘சூர்’ என்ற கப்பல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் உள்ளிட்ட எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய அபாயகரமான பொருட்கள் இருந்துள்ளன.

இதன் காரணமாகவே தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தீயின் வெப்பம் காரணமாக கன்டெய்னர்களும் உருகிவிட்டன.

தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்து மாயமான 4 சிப்பந்திகளையும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் நேற்று மாலை வரையிலும் அவர்களை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

தீ விபத்தின் போது, அந்த சரக்கு கப்பலில் இருந்த 27 சிப்பந்திகளில் 9 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டையும், 2 பேர் தாய்லாந்து நாட்டையும், இங்கிலாந்து, ரோமானியா, தென் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும் இருந்தனர். கேப்டன் உள்பட மற்ற 13 பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்