மராட்டிய அரசுக்கு ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் கோடி கடன்

மராட்டிய சட்டசபையில் நேற்று பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2018-03-08 23:00 GMT
மும்பை,

மராட்டிய அரசுக்கு ரூ. 4 லட்சத்து 13 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் 2017-18-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய அரசுக்கு ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 44 கோடி கடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.6 சதவீதமாகும். மேற்கண்ட கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ.31 ஆயிரத்து 27 கோடி செலுத்தவேண்டும்.

இதேபோல் 2017-18-ம் ஆண்டுக்கான மொத்த வருமானம் ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 738 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரிமூலமாக மட்டும் ரூ.1 லட்சம் 90 ஆயிரத்து 842 கோடி கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை மட்டும் ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.30 ஆயிரத்து 138 கோடி வரிவருவாய் கிடைத்துள்ளது.

இதேபோல் சராசரி கொள்முதல் அளவு 8.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்.

இருப்பினும் இளஞ்சிவப்பு புழுக்கள், ஆலங்கட்டி மழை, பருவம் தவறிய மழை போன்றவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண் துறை வளர்ச்சி 8.3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டியத்தில் 12.9 சதவீதம் வீடுகளில் பெண்கள் குடும்ப தலைவர்களாக செயல்படுகின்றனர். 34 சதவீதம் வீடுகளில் கழிவறை வசதி இல்லை. 12.9 சதவீதத்தினர் பொது கழிவறைகளை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்