புத்தூரில் குடோனில் புகுந்து பாக்கு திருடிய வழக்கில் 8 பேர் கைது

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கொடிம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது சபாய். பாக்கு வியாபாரி.

Update: 2018-03-08 23:19 GMT
மங்களூரு,

முகமது சபாய்க்கு சொந்தமான குடோனில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பாக்கை திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக முகமது சபாய், புத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், தட்சிண கன்னடா போலீஸ் சூப்பிரண்டு ரவிகாந்தே கவுடா உத்தரவின்பேரில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், முகமது சபாய்க்கு சொந்தமான குடோனில் புகுந்து பாக்கு திருடியதாக பெல்தங்கடி தாலுகா குவெட்டு கிராமத்தை சேர்ந்த முகமது ரபீக், முகமது இசாக், உமர் பாரூக், இர்ஷாத், உமர் குன்னி, ஜாபர், விஜய் ஷெட்டி, மற்றொரு முகமது ரபீக் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பாக்கு, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் சுள்ளியா, புத்தூர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பாக்கு திருடி வந்தது தெரியவந்தது. கைதான 8 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்