பெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் கலெக்டர் ரோகிணி பேச்சு

பெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி பேசினார்.

Update: 2018-03-08 23:51 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 954 பெண்களே உள்ளனர் என்பதால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் ரோகிணி பேசினார்.

சேலம் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கும் விழா சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்ற பாலின சதவீதத்தில் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது. இது முதலிடத்தில் வருவதற்கு அனைத்து பெண்களும், பெண்குழந்தைகளை பெற்றெடுக்க முன்வரவேண்டும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை தாங்களே தீர்மானிக்கும் அளவிற்கு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

ஆண்களும், பெண்களும் இரண்டு கண்கள் போன்றவர்கள். இரண்டு கண்களில் ஒருகண் இல்லை என்றாலும் உலகை முழுமையாக பார்க்க இயலாது. பெண்கள் ஆண்களோடு போட்டி போடுவதைவிட ஆண்களோடு இணைந்து பெண்களும் பாடுபட்டால் அக்குடும்பத்தின் வளர்ச்சியும், பொருளாதாரமும், வாழ்க்கை தரமும் தொடர்ந்து மேம்படும். இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

விழாவில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் பல்வேறு வங்கிகளின் மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 161 பெண்களுக்கு ரூ.2.63 கோடியும், ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 10 பெண்களுக்கு ரூ.1.18 கோடியும் மற்றும் 30 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.40 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 32 குழந்தைகளுக்கு ரூ.40.26 லட்சம் கல்வி கடனுதவியும் என மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ.6.61 கோடி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

விழாவில் இந்தியன் வங்கியின் துணை மண்டல மேலாளர் சுசீலா பார்த்தசாரதி வரவேற்றார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் எஸ்.ஈஸ்வரன், இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் கோபிகிருஷ்ணன், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் பாமா புவனேஸ்வரி, தானம் அறக்கட்டளை சேலம் ஒருங்கிணைப்பாளர் சிவராணி, இந்தியன் வங்கி கிளைகளின் மகளிர் மேலாளர் மகேஸ்வரி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) மேலாளர் ஏ.உதயகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்