திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி: தலையை நாய் தூக்கிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு

திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு பலியான முதியவரின் தலையை நாய் தூக்கிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-09 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஆர்யன் (வயது 65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று சிகிச்சை பெறுவதற் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர், மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல் வேடப்பட்டியில் உள்ள தண்டவாளத்தை ஆர்யன் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு ஆர்யன் பலியானார். அவருடைய உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

இதைப்பார்த்த ரெயில் டிரைவர் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இந்தநிலையில், போலீசார் வருவதற்கு முன் தண்டவாளத்தின் ஓரத்தில் கிடந்த ஆர்யனின் தலையை ஒரு நாய் திடீரென தூக்கிக்கொண்டு ஓடியது. மனித தலையை வாயில் கவ்வியபடி நாய் வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த நாயை கல்லால் தாக்கினர். இதையடுத்து, தலையை முட்புதருக்குள் போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. இதற்கிடையே அங்கு வந்த ரெயில்வே போலீசார் சிதறி கிடந்த உடலையையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்