காவிரி நீர் தீர்ப்பு: நிலத்தடி நீர் பயன்பாடு சாத்தியமா?

காவிரி பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கன அடி) தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-03-18 06:45 GMT
நடுவர் மன்றம்  ஏற்கனவே  தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அதில் 14.75 டி.எம்.சி.யை குறைத்தது தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 14.75 டி.எம்.சி. கர்நாடகத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதில் 10 டி.எம்.சி.யை எடுத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.

நிலத்தடி நீரின் அளவை யூகத்தின் அடிப்படையில்தான் கணிக்க முடியுமே தவிர, இவ்வளவு நீர் இருக்கிறது என்று உறுதியாக கூறிவிட முடியாது.

மேலும் நிலத்தடி நீரின் அளவு காலத்துக்கு ஏற்ப மாறுபடும். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் வருண பகவான் கையை விரித்துவிட்டால், நிலத்தடி நீர் கானல் நீராகி அதலபாதாளத்துக்கு சென்றுவிடும். சில இடங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எனவே நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்வது நொண்டிக்குதிரையில் ஏறி ஆற்று வெள்ளத்தை கடக்க முயற்சிப்பதற்கு சமம்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து பிரபல நில நீரியலாளரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனருமான முனைவர் ப.மு.நடராசன் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், தமிழகத்தில் காவிரி டெல்டாவின் 10 டி.எம்.சி நிரந்தரமற்ற, தரம் குறையும் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொண்டது, டெல்டா பகுதி மக்களைப்போல் நில நீரியலாளரான எனக்கும் உடன்பாடில்லை.

1970-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஐ.நா. வளர்ச்சி திட்டக்குழு காவிரி டெல்டாவின் நில நீர்வளத்தை கணக்கிட அறிவியல் சார்ந்த ஆய்வை முதன் முதலில் மேற்கொண்டது. அந்த ஆய்வில் நானும் பங்கெடுத்துள்ளேன்.

தமிழகத்துக்கு முன்பு நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி நீரில் 14.75 டி.எம்.சி. நீரை குறைத்து, டெல்டா பகுதியில் உள்ள 10 டி.எம்.சி. நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடு, தற்போது டெல்டாவில் நிகழும் இயற்கை மற்றும் செயற்கை சூழல்களுக்கு எதிரானது ஆகும்.

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

நில நீர்வளத்தை கணக்கிடுவது கடினம்

மேற்பரப்பு நீர்வளம் கணக்கிடுவதை காட்டிலும் நிலத்தடி நீர்வளத்தை கணக்கிடுவது சிரமம். மேற்பரப்பு நீர்வளம் கண்ணால் பார்த்து, நில அமைப்பிற்கு ஏற்புடைய நீர்ஓட்டத் திறனை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

ஆனால், நிலத்தடி நீர்வளம் கண்ணால் பார்க்காமலேயே, நிலத்தின் கீழ் உள்ள நீர்க்கோர்ப்பு பாறைகளின் நீரை உரிஞ்சும், கடத்தும் மேலும் தக்க வைத்துக்கொள்ளும் திறனை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. நீர்க்கோர்ப்பு பாறைகளின் மேற்கண்ட திறன் ஒவ்வொரு அடி நீளம், ஆழம் மற்றும் கனத்திற்கும் வேறுபடும். எனவே ஒருபகுதியில் கணக்கிடப்படும் நிலநீர் வளத்தின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

இயற்கை-செயற்கை நிகழ்வுகள் நிலநீர் வளத்தைப் பாதித்தல்

இயற்கை நிகழ்வுகளான ஆழிப்பேரலை, உயர் கடல் அலையால் கடல்நீர் நிலப்பரப்பில் பரவுதல், கடல் நீர், நீர்க்கோர்ப்பு பாறையில் ஊடுருவுதல் மேலும் செயற்கை நிகழ்வுகளான, பூமியின் தரைவழியாக தரைக்கு கீழ் கழிவுநீர் நிலநீரில் கலத்தல், தரைக்கு கீழ் உள்ள புதை படிமங்கள் மற்றும் மீத்தேன் ஆவியை எடுத்தல் போன்ற செயற்கை நிகழ்வுகள், டெல்டா நிலநீர் வளத்தைப் பாதிக்கிறது. இயற்கையாகவே 40 சதவீத நிலப்பகுதியில் உள்ள நிலநீர் உப்பு நீராக இருக்கிறது.

காவிரி டெல்டா 2,300 ஆண்டுகளுக்கு மண் நிரம்பிய கடல் நிலம் ஆகி, சுமார் 40 சதவீத நிலப்பகுதியின் மேற்பரப்பில் 3 அடி கனத்திற்கும் மேலான மண் கழியாக இருப்பதால் மழைநீர் நிலநீராக மாறுவதை தடுக்கிறது. இதன் காரணமாக நிலநீரின் வளம் குறைகிறது. விளை நிலங்களில் விவசாயம் தடைபடுதல், மழை பெய்யாமை, நீர் நிலைகளில் வறட்சி ஆகியவை நிலநீர் வளத்தை பாதிக்கிறது.

எனவே ஒரு பகுதியின் நில நீர்வளம் நிலையானது அல்ல என்ற உண்மையை தெரிந்து கொள்வது அவசியம். ஆகவே, டெல்டாவில் நிரந்தரமற்ற, தரம் குறையும் நிலநீரை நிரந்தர அளவாக சுப்ரீம் கோர்ட்டு கணக்கெடுத்துக்கொண்டது, காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதிக்க வைக்கும்.

தமிழகத்தின் பங்கை குறைத்ததற்கு அறிவியல் சார்ந்த காரணம் என்ன?

காவிரி நடுவர் மன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் வழங்கிய 3 தீர்ப்புகளில், முதல் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி.யும், 2-வது தீர்ப்பில் 192 டி.எம்.சி.யும், 3-வது தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. நீருமாக மொத்தத்தில் 27.75 டி.எம்.சி. அளவு நீர் குறைந்து உள்ளது.

இவ்வாறு தமிழகத்துக்கு குறைந்து கொண்டே வருவதும் கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் கூடிக்கொண்டே போவதற்கும் எந்த அறிவியல் சார்ந்த விளக்கமும் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பில் இடம்பெறவில்லை.

தமிழகத்துக்கு 27.75 டி.எம்.சி அளவு நீர் குறைந்துள்ளதால் காவிரி டெல்டாவில் இரண்டரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தரிசு ஆகும். இதனால் ஓர் ஆண்டுக்கு குறையும் நெல் உற்பத்தியின் மதிப்பு 1,388 கோடி ரூபாய்.

இந்த தண்ணீரை நபருக்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் வீதம் வழங்கினால் 786 கோடி மக்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கலாம்.

அதாவது தமிழக மக்களுக்கு 102 நாட்களுக்கு (சுமார் மூன்றரை மாதங்கள்) அல்லது தற்போதைய சென்னை மக்களுக்கு 4 ஆண்டுகளுக்கு வழங்கலாம். இந்த அளவு மதிப்புள்ள நீரை தமிழகத்திற்கு குறைப்பது சரியா? இது எந்த வகையில் நியாயம்?

நிரந்தரமற்ற நிலத்தடி நீரை கணக்கில் சேர்த்தது தவறான அணுகுமுறை

காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீர் வளம் நிரந்தரமில்லாதது. அப்படியே நிரந்தரம் என்று வைத்துக்கொண்டாலும், கடல்நீர் ஊடுருவி நிலநீரை உவப்பாக்கி, நிலநீரின் தரம் கெடுவதால், அதைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தாக்கிய ஆழிப்பேரலை (சுனாமி) காவிரி டெல்டாவின் கடற்கரையோர 3 டி.எம்.சி. நிலநீரை உப்புநீர் ஆக்கி விட்டது என்பதை அப்போது நான் மேற்கொண்ட ஆய்வில் அறிவித்துள்ளேன். இதன்மூலம் டெல்டாவின் நிலநீர் தரம் நிரந்தரமற்றது என்பது தெரிகிறது.

மேலும், அப்போது உவர்நிலமான சுமார் 700 ச.கி.மீட்டருக்கும் மேலான டெல்டா விவசாய நிலம் இப்போதும் உவர் நிலமாகவே இருக்கிறது என்பதை அறிகிறோம். உவர் நிலத்தில் ஊறும் நிலநீரும் உவராகவே இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் இதுபோன்று கர்நாடக மாநிலத்தில் நிகழ வாய்ப்பு இல்லை. எனவே அந்த மாநிலத்தில் நிலநீரை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தால் அது சரியான நிலைப்பாடாக இருந்திருக்கும். காரணம், கர்நாடக மாநில காவிரி படுகை கடலோரத்தில் அமையவில்லை.

இதனால் அங்குள்ள காவிரி படுகை நிலம் தமிழகத்தை போல் ஆழிப்பேரலையால் பாதிக்கப்படவோ, நிலநீர் உப்பு நீராகவோ வாய்ப்பு இல்லை. மேலும், நிலநீர்மட்டம் தாழ்வதால் கடல்நீர் நீர்க்கோர்ப்பு பாறையில் ஊடுருவி, நிலநீரை உப்புநீராக்கும் வாய்ப்பும் அறவே கிடையாது. எனவே கர்நாடகத்தின் நிலநீரை கணக்கில் எடுக்காமல், வளமும், தரமும் குறையும் தமிழக நிலநீரை கணக்கில் எடுத்தது தவறானது.

எனவே நிரந்தரமற்ற, மேலும் நிரந்தரமான தரத்துடன் கிடைக்க வாய்பில்லா நிலநீரை டெல்டாவில் பயன்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது சரியான அணுகுமுறை அல்ல. ஆகவே சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும், மக்களும் இந்த அறிவியல் உண்மையை அறிந்து கொள்வது அவசியம்.

பேரிடர் நிதியை பயன்படுத்த வேண்டும்

தமிழகம் தற்போது 3.5 லட்சம் கோடி ரூபாய் முதல் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் கடன் சுமையில் தத்தளிக்கிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிப்பணிகளும் இதனால் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசால் நீர் மேலாண்மை, கடல் நீரை நன்னீராக்கல், நீரை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்காக செலவு செய்ய இயலாது.

தண்ணீர் தட்டுப்பாடும் பேரிடரில் அடங்கும். எனவே மத்திய அரசு பேரிடர் நிதியை பயன்படுத்தி, ஒரு காலக்கெடு நிர்ணயித்து காவிரி டெல்டாவின் 409 டி.எம்.சி நீர்ப்பற்றாக்குறையும், தமிழகத்தின் 2,056 டி.எம்.சி நீர் பற்றாக்குறையையும் களையை இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி இலக்கான 162 லட்சம் கோடி ரூபாயில், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி, நதிநீரை பங்கிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியாவின் தண்ணீர் தட்டுப்பாட்டை களைந்து விவசாயிகளின் தற்கொலையை தடுக்கலாம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஒவ்வொரு மாதமும் முறைப்படி வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறி இருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதாக கூறி இதுவரை அமைக்காமல் இருக்கும் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவிட்டால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்... சிந்திக்கவும்...

நதிகள் நாட்டின் சொத்தாக இருப்பதால், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.


தமிழக கர்நாடக, மேற்பரப்பு நீர்வளம்

தமிழகத்தின் ஆண்டு சராசரி மேற்பரப்பு நீர்வளம் 853 டி.எம்.சி. ஆனால் கர்நாடக மாநிலத்தின் நீர்வளம் 3,475 டி.எம்.சி, அதாவது 2,622 டி.எம்.சி. அதிகம். கர்நாடக மாநிலத்தின் மேற்கு பகுதியின் ஆண்டு சராசரி மழை அளவு 3,000 மில்லி மீட்டர். இதன் காரணமாக, இங்கு, சராசரியாக 1,500 டி.எம்.சி. முதல் 2,000 டி.எம்.சி அளவு மழைநீர் கடலில் கலக்கிறது.

இங்கு கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தும் நிலை கர்நாடக மாநிலத்துக்கு கூடிய விரைவில் ஏற்படும். இப்பொழுதே அந்த நீரை காவிரி நதி படுகைக்கு திருப்பி விட்டால் கர்நாடகமும் பயன்பெறும்; தமிழகத்துக்கு தற்பொழுது குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி நீரையும் மீண்டும் வழங்கலாம்.

“நதிநீர் தேசிய சொத்து” என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பதால், மக்கள் நலன் கருதி மத்திய அரசு, இப்போதே முழுவீச்சுடன், கர்நாடக மாநிலத்தில் வீணாகும் வெள்ளநீரை குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தி, காவிரி படுகையின் நீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக களைய முயற்சி எடுக்க வேண்டும்.

மக்கள் நலன் பேண விரும்பும் மத்திய அரசு, இவ்வழியில் தமிழக, கர்நாடக மக்களின் தண்ணீர் துக்கத்தை களையலாம்.


காவிரி டெல்டாவின் தண்ணீர் தாகம் களையும் வழிகள்

காவிரி டெல்டா ஒரு காலத்தில் “நெற்களஞ்சியம்”. தற்போது இது “புல் புதர்” களஞ்சியம்.

இந்த டெல்டா தமிழக உணவுத் தேவையில் தன்னிறைவு அடைவதற்கு வழங்கும் 31 சதவீத உணவை வழங்க வேண்டுமாயின் கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்த வேண்டும், அல்லது கிழக்கு நோக்கி கடலில் கலக்கும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு நதிகளில் இருந்து கடலில் கலக்கும் நீரை டெல்டா பகுதிக்கு பயன்படுத்த மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2050-ம் ஆண்டில் இந்த நதிகளில் இருந்து 4,100 டி.எம்.சி. தண்ணீரும், இதேபோல் இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் இருந்து 50,100 டி.எம்.சி. தண்ணீரும் வீணாக கடலில் கலக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

2050-ம் ஆண்டு வாக்கில் காவிரி டெல்டாவின் நீர்த்தேவை 424 டி.எம்.சியாக இருக்கும். ஆனால் இங்குள்ள நிரந்தர நீர்வளம் 15 டி.எம்.சி. எனவே நீர் பற்றாக்குறை 409 டி.எம்.சி. காவிரி டெல்டா, இந்த அளவு கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்த ஆகும் செலவு 14 லட்சம் கோடி ரூபாய். ஆனால் 11 லட்சம் கோடி ரூபாய் செலவில், வீணான வெள்ளநீரை பயன்படுத்தி இந்தியாவின் எப்பகுதியிலும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்கலாம்.

கொலராடோ நதி நீர் பங்கீட்டை முன்னுதாரணமாக கொண்டு, இனியாவது இந்திய நதிகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை 2022-ம் ஆண்டுக்குள் வழங்க மத்திய அரசு விரும்புகிறது.

வீணாக கடலில் கலக்கும் நீரை முறைப்படி பயன்படுத்த தவறினால் இந்த நோக்கத்தை எட்ட முடியாது. மேலும் இந்தியாவில் 2050-ம் ஆண்டில் வாழும் 164 கோடி மக்களுக்கு தேவைப்படும் 45 கோடி டன் தானிய உற்பத்தியையும் எட்ட இயலாது. மேலும், நதிநீரை பங்கிடாமல் மத்திய அரசு எதிர்பார்ப்பது போல் விவசாயிகளின் வருமானத்தை இன்னும் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கவும் முடியாது.


உலக அளவில் நதி நீர்பங்கீடு நிலை

அமெரிக்க நாட்டின் மேற்கு பகுதியில், ஏழு மாநிலங்களில் பயணிக்கும் கொலராடோ நதியின் நீர் பங்கீடு, உலகளவில் பெரிதும் பாராட்டப்படும் நதிநீர் பங்கீடாக அமைந்துள்ளது. இந்த நதிப்படுகையின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா, அரிசோனா, நிவேடா ஆகிய மாநிலங்கள் வறட்சி மாநிலங்கள் ஆகும். இம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதியின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மில்லி மீட்டர்.

1992-ம் ஆண்டின் கொலராடோ சட்டத்தின்படி, இந்த நதிநீர்ப் படுகையில் நீர்வளமுடைய வடக்கு மாநிலங்களும், தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வறட்சி மாநிலங்களும் நதிநீரை 1945-ம் ஆண்டில் இருந்து பகிர்ந்துகொள்கின்றன. 2012 முதல் 2016-ம் ஆண்டு முடிய நிகழ்ந்த, இதுவரை காணாத கொடிய வறட்சி ஆண்டுகளிலும் இந்த நதிப்படுகையில் உள்ள ஒட்டு மொத்த வீடுகளிலும் ஒரு நொடி கூட தண்ணீரோ, புனல் மின்சாரமோ தடைபட்டது இல்லை.

இந்த நதிநீர் பங்கீட்டில், நதியின் மேற்பரப்பு நீர்வளம் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாநிலத்தின் தேவை அளவை கண்டு, அத்தேவையை எட்டும் வகையில், 2020-ம் ஆண்டு வரை பயன்படுத்த 1992-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டம் வழி காட்டுகிறது. நதிநீர் பங்கீட்டில், படுகையின் நில நீர்வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

உலகில் எந்த நீர்க்கோர்ப்பு பாறையிலும் இல்லாத அளவில் எகிப்து, சாட், சூடான், லிபியா நாடுகளில் அமைந்துள்ள நுபியன் மணல்பாறை மற்றும் நீர்க்கோர்ப்பு பாறையில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 550 கன கிலோ மீட்டர் அளவுக்கு நிலநீர் உள்ளது. இந்த நீர், மேற்கண்ட நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நீரை பாதுகாக்க பொதுவாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை தவிர, ஒவ்வொரு நாடும் பகிர்ந்து கொள்ளும் நிலநீர் அளவு நிர்ணயிக்கப்படவில்லை.

கொலராடோ நதிப்படுகை மட்டுமல்லாது, உலகளவில் எந்த ஒரு நதிப்படுகையிலும் உள்ள நீரை பகிர்ந்துகொள்ள மேற்பரப்பு நீர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. நிலநீர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததற்கு முக்கிய காரணம், மேற்பரப்பு நீர் இல்லாமல் நிலநீர் இல்லை.

மேலும், நிலநீர் ஒரே அளவில், ஒரே தரத்தில் எப்பொழுதும் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இயற்கை நிகழ்வுகளான ஆழிப்பேரலை, எரிசக்தி-திட, திரவ ஆவிப் பொருளை பூமியில் இருந்து எடுத்து பயன்படுத்தல் ஆகியவை நில நீரின் அளவையும் தரத்தையும் பாதிப்பதே இதற்கு காரணம் ஆகும்.

மேலும் ஊறும் அளவை மிஞ்சி அதிக அளவில் நிலநீர் எடுக்கப்படுவதால், நிலநீர் மட்டம் தாழ்ந்து கடற்கரைப் பகுதி நிலநீர்க்கோர்ப்பு பாறைகளில் கடல்நீர் புகுந்து தரமான நிலநீரை உவர்நீர் ஆக்குகிறது. அத்துடன் மக்களின் அன்றாட பயன்பாட்டில் உற்பத்தியாகும் கழிவுநீர், நிலநீரின் தரத்தை கெடுக்கிறது. கடலோர நிலநீர் கோர்ப்பு பாறைகளில் இது ஒரு இயற்கை நிகழ்வாகும். இந்த காரணங்களால் நிலநீரின் வளமும், தரமும் கெட்டு விடுவதால் நிலநீரின் அளவு எப்போதும் ஒரே அளவில் இருப்பது இல்லை.

மேலும் செய்திகள்