பிரசவ ஆஸ்பத்திரிக்காக சினிமா நடிகை தானமாக வழங்கிய அரண்மனை வீடு: கழிவுநீர் சூழ்ந்து, பாழடைந்து கிடக்கும் அவலம்

அரசு பிரசவ ஆஸ்பத்திரிக்காக சினிமா நடிகை வழங்கிய அரண்மனை வீடு, கழிவுநீர் தேங்கியும், பாழடைந்தும் இருக்கிறது. இதை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-04-03 22:45 GMT
பரமக்குடி,

பரமக்குடி அரசியல் ஆன்மிகம், திரையுலகம் என அனைத்திலும் சிறந்த விளங்கும் ஊராகும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பல துறைகளில் சாதனை படைத்துள்ளனர் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் பரமக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சிவபாக்கியம் இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்து வந்தார்.

ஐந்து முனைப்பகுதியில் இருந்து அவரது சொந்த அரண்மனை வீட்டை அரசு பிரசவ ஆஸ்பத்திரிக்காக தானமாக வழங்கியுள்ளார். அதன்படி இந்த வீடு சிலகாலம் பெண்களின் பிரசவ மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது, பின்பு காட்டுப்பரமக்குடியில் உள்ள தலைமை மருத்துவமனையோடு பிரசவ ஆஸ்பத்திரி இணைக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் நடிகை சிவபாக்கியம் தானமாக வழங்கிய அரண்மனை வீடு பாழடைந்து சேதமடைந்துள்ளது, கட்டிடத்தின் பின் பகுதியில் ஓடும் கழிவுநீர் கட்டிடத்திற்குள் புகுந்து குளங்கள் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் புழுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரப்பும் இடமாக திகழ்கிறது, இதனால் பொது மக்கள் முகம் சுழித்தபடியே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விளம்பரம் செய்யும் இடமாகவும் மாறிவிட்டது.

அரசு இடங்களை ஆக்கிரமித்து அபகரிக்கப்படும் சூழ்நிலையில், நடிகை சிவபாக்கியம் பல கோடி மதிப்பிலான தனது சொந்த வீட்டை அரசுக்கு தானமாக வழங்கியும், அதை எவ்வித பயன்பாடின்றி கிடப்பில் போட்டு வைத்திருப்பது வேதனைக்குரியதாகும். பழமை மாறாமல் கட்டிடத்தின் கதவுகள் ஜன்னல்கள் சேதமடையாமல் அப்படியே உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்ததில் கட்டிடங்கள் சேதமடைந்துவிட்டது, ஆகவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்கட்டிடத்தை பராமரிக்க பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். 

மேலும் செய்திகள்