தொழிலாளி வெட்டிக் கொலை ஆட்டுக்கிடையில் படுத்து இருந்தவரை மர்மகும்பல் தீர்த்துக் கட்டியது

நெல்லை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆட்டுக்கிடையில் படுத்து இருந்தவரை மர்மகும்பல் தீர்த்துக்கட்டியது.

Update: 2018-04-15 23:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழகள்ளிகுளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 55), ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், வயல்வெளிகளில் ஆட்டு கிடையும் அமைத்து வந்தார். தற்போது அதே ஊரை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான கீழதுவரைகுளத்தில் உள்ள வயலில் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார். ஆட்டுக்கிடையில் 400 ஆடுகள் வரை இருந்தன. இரவில் அங்கேயே முத்து தங்கி இருந்தார்.

நேற்று காலையில் முத்துவுக்கு காபி கொடுக்க அவருடைய மகன் சுடலைபெருமாள் சென்றார். அப்போது சுடலைபெருமாள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது. அதாவது, முத்து கட்டிலில் படுத்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சுடலைபெருமாள், இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.முத்துவின் இடது காது அறுந்து தொங்கியது. முதுகு, கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. போலீஸ் மோப்ப நாய் ரிக்கியும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

முத்து கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டுக்கிடைக்குள் புகுந்து ஆடுகளை திருடி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் முத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஆனாலும் முத்துவின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் இருப்பதாலும், அதுவும் கொடூரமாக மர்ம கும்பல் வெட்டி இருப்பதாலும் கொலையாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் கொலைக்கான காரணம் தெரிய வந்த பிறகே, கொலையாளிகள் யார்? என்பது பற்றிய விவரம் தெரியும் என்று போலீசார் கூறுகின்றனர். 

மேலும் செய்திகள்