கோட்டக்குப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பலியான மாணவன் உடல் கரை ஒதுங்கியது

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலியான மாணவன் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

Update: 2018-04-16 22:00 GMT
 விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் முகிலன் (வயது 25). புதுச்சேரியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சபரிநாதன் (16). புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களும் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமாரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேற்று முன்தினம் மாலை இவர்கள் 3 பேரும் சின்னமுதலியார் சாவடி கடற்கரைக்கு சென்றனர். அங்கு முகிலனும், சபரிநாதனும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை முகிலன் மற்றும் சபரிநாதனை வாரி சுருட்டி, கடலுக்குள் இழுத்து சென்றது. கரையில் இருந்த அவர்களின் நண்பர் அஜித்குமார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீனவர்கள் சிலர் உதவியுடன் 2 படகுகளில் கடலுக்குள் சென்று அலையில் இழுத்துச் சென்றவர்களை தேடிப்பார்த்தனர்.

இதில் என்ஜினீயர் முகிலனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனவர்கள் மீட்டனர். ஆனால் மாணவன் சபரிநாதனை தேடிபார்த்த போதும் பலன் இல்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை சின்னமுதலியார் சாவடி கடற்கரை ஓரமாக சபரிநாதனின் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சபரிநாதனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கோட்டக்குப்பம் போலீசார் அங்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்