திருமணம் செய்வதாக ஆசை காட்டி பட்டதாரி பெண்ணிடம் 25 பவுன் நகை-பணம் மோசடி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணிடம் 25 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த ‘பேஸ்புக்’ காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-16 22:00 GMT
தேனி, 

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணுக்கும், திருப்பூர் மாவட்டம் பிச்சாம்பாளையம் அருகே உள்ள தேக்கம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் கார்த்திகேயன் (வயது 30) என்பவருக்கும் ‘பேஸ்புக்’ (முகநூல்) மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கார்த்திகேயன் ஆசை வார்த்தை கூறி, அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம், 25 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டார். அந்த பெண், தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கையோடு இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி கார்த்திகேயன் பழனிசெட்டிபட்டிக்கு வந்தார். அந்த பெண், அவரை சந்தித்து பேசினார். அப்போது, கார்த்திகேயன் மேலும் ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு அவரிடம் கூறினார். ஆனால், தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று அந்த பெண் கூறினார்.

பணம் கொடுத்தால் தான், திருமணம் செய்து கொள்வேன் என்று கார்த்திகேயன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த பெண்ணை கார்த்திகேயன் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்