பஸ்சின் பின்னால் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு அரசு பஸ் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு

கூடக்கோவில் அருகே அரசு பஸ்சின் பின்னால் நின்ற மோட்டார் சைக்கிள் மீது, மற்றொரு அரசு பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை இறந்தார்.

Update: 2018-04-16 22:00 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகா விடத்தகுளத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் பாண்டியராஜன் (வயது29). இவர் தூத்துக்குடி சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் புதுமாப்பிள்ளை பாண்டியராஜன் விடத்தகுளம் வந்தார்.

பின்பு நேற்று காலை வேலைக்கு செல்ல, காரியாபட்டிக்கு சென்று பஸ் ஏறுவதற்காக கூடக்கோவில் வழியாக உறவினர் சுரேஷ்குமார் (32) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மல்லிகைநகர் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, அங்கு நின்றிருந்த அரசு பஸ்சின் பின்னால் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ், பிரேக் பிடிக்காததால் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் 2 பஸ்களுக்கிடையே மோட்டார் சைக்கிள் சிக்கி சின்னாபின்னமாகியதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். தகலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே புதுமாப்பிள்ளை பாண்டியராஜன் இறந்தார். சுரேஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்