மத்திய அரசை கண்டித்து ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 40 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2018-04-16 22:45 GMT
திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதனால் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 10.55 மணிக்கு வந்து திருச்சி ரெயில் நிலையத்தின் முதல் நடை மேடையில் நின்று கொண்டிருந்தது. அப்போது முதல் நடைமேடையில் மறைந்து இருந்த மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினை சேர்ந்த சிலர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த ஓடி வந்தனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களை பிடித்து தடுத்து நிறுத்தி ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற்றி அழைத்து வந்தனர். இந்நிலையில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக வழிவிடு வேல்முருகன் கோவிலில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தை சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்