இரு தரப்பினர் மோதல் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாலை மறியல்

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-16 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ளது கச்சாலிகானூர். இந்த கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கிராமத்தில் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கச்சாலிகானூர் கிராமத்தில் ஊர் திருவிழா நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை சிலர் கழற்ற முயன்றனர். அந்த நேரம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த 7 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 11 பேர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நேற்று காலை ஒரு தரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காந்தி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (கிருஷ்ணகிரி டவுன்), பழனிசாமி (பர்கூர்) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்