அடகு வைத்த நிலத்தை தம்பி மீட்டு தராததால் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

அடகு வைத்த நிலத்தை தம்பி மீட்டு தராததால் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-16 23:00 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்(வயது 45) விவசாயி. இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி ஆரோக்கியதாசின் திருமணத்திற்காக தனக்கு சொந்தமான நிலத்தை ஒரு வங்கியில் அடகு வைத்து, அந்த பணத்தை பெற்று கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஆரோக்கியதாஸ், தனது அண்ணன் வின்சென்டின் நிலத்தை மீட்டு கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வின்சென்ட், பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார், இந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட், தனது நிலத்தை மீட்டு தரும்படி நேற்று காலை எலந்தங்குடியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், பெரம்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற வின்சென்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்