லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த மருந்து நிறுவன உரிமையாளர் கைது

திருச்சியில், லாபத்தில் பங்கு தருவதாக கூறி உறவினரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த தனியார் மருந்து நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை தேடி வருகிறார்கள்.

Update: 2018-04-16 22:15 GMT
திருச்சி,

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 60). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது உறவினர் திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்த முருகபாண்டியன் (51). இவர் அந்த பகுதியில் மருந்து நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் பணி ஓய்வுபெற்ற ரவிச்சந்திரனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பணிக்கொடையாக கிடைத்தது. இதனை தெரிந்துகொண்ட முருகபாண்டியன், ரவிச்சந்திரனை அணுகி தனது மருந்து நிறுவனத்தில் அந்த தொகையை முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

இதனை நம்பிய ரவிச்சந்திரன் வங்கி பரிவர்த்தனை மூலம் முருகபாண்டியனிடம் ரூ.30 லட்சம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட முருகபாண்டியன், ரவிச்சந்திரனை பங்குதாரராக சேர்க்காமலும், லாப தொகையில் பங்கு எதுவும் கொடுக்காமலும் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து பணத்தை திருப்பி தரும்படி ரவிச்சந்திரன் கேட்டதற்கும், அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிச்சந்திரன் மதுரை ஐகோர்ட்டு கிளையில், முருகபாண்டியன் தன்னிடம் ரூ.30 லட்சத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், முருகபாண்டியன் மற்றும் அவரது மனைவி பொற்கொடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் முருகபாண்டியன் நடத்தி வந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்தாகிவிட்டதும், அவர் ரூ.30 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று முருகபாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பொற்கொடியை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்