அபு ஜிண்டால் மீதான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய அபு ஜிண்டால் மீதான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2018-04-20 23:58 GMT
மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதோடு, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டால் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இதையடுத்து சவுதி அரேபியாவில் பதுங்கி இருந்த அபு ஜிண்டால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார்.

அபு ஜிண்டால் மீதான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அபு ஜிண்டாலை சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தி கொண்டு வந்ததற்கான பயண ஆவணங்களை அவரிடம் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவிடுமாறு அவரது வக்கீல் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு கோர்ட்டு அபு ஜிண்டாலின் பயண விவரங்களை வழங்குமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி போலீசார் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதி நிதின் சம்பாரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர் கேட்கும் ஆவணங்கள் அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவை. இதனால் சி றப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபு ஜிண்டால் தரப்பு வக்கீல், தனது பயண ஆவணங்களை பெற வேண்டியது ஒருவரின் உரிமை என வாதிட்டார்.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் அதுவரையில் அபு ஜிண்டால் மீதான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்