ஈரோட்டில் பெண் கொலை: “நடத்தை சந்தேகத்தால் மனைவியை குத்திக்கொன்றேன்” கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

நடத்தை சந்தேகத்தால் மனைவியை குத்திக்கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-04-23 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு ஆசிரியர்காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பிரபல கொசுவர்த்தி நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தீபரஞ்சினி (வயது 25). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் கனிஷ்கா என்கிற மகள் உள்ளாள்.

விவேகானந்தனும், தீபரஞ்சினியும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது விவேகானந்தன் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஆசிரியர்காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீபரஞ்சினி சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விவேகானந்தனுக்கும், தீபரஞ்சினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் தீபரஞ்சினியை விவேகானந்தன் தாக்கினார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய தீபரஞ்சினியை நடுவீதியில் வைத்து விவேகானந்தன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபரஞ்சினியை கொலை செய்த விவேகானந்தனை நேற்று கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நாங்கள் வசிக்கும் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தால் பக்கத்து வீட்டின் மொட்டை மாடி தெரியும். எனது மனைவி சமைக்கும்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு பார்ப்பார். எனவே எனது மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், எனது மனைவியை கண்டித்தேன். சம்பவத்தன்று சிவரஞ்சினி சமையல் செய்தபோது அதே நபர் மொட்டை மாடியில் நின்றுகொண்டு கையசைத்தார்.

ஜன்னல் கதவை அடைத்துவிட்டு சமையல் செய்யும்படி எனது மனைவியிடம் கூறினேன். அதற்கு அவர், ‘என்னை எதற்காக திட்டுகிறீர்கள்? உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நின்றிருப்பவரை கண்டிக்க வேண்டியது தானே’ என்று எதிர்த்து பேசினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை நான் அடித்து தாக்கினேன் அப்போது வீட்டில் இருந்த எனது தாயும், தங்கையும் வந்து விலக்கி விட்டனர்.

இந்த சண்டையில் என்னை பிரிந்து செல்வதாக கூறிவிட்டு சிவரஞ்சினி வீட்டில் இருந்து வெளியே சென்றார். இது எனக்கு மேலும் கோபத்தை தூண்டியதால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்றேன். அவர் வீதியில் சென்றவுடன் அவளை மடக்கி பிடித்து கத்தியால் பல முறை குத்தினேன். இதில் அவள் இறந்து விட்டாள்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் செய்திகள்