வேலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி தற்கொலை

வேலூரில் வேலையில் சேர பணம் கிடைக்காததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல்ஜோடி பீரில் விஷம் கலந்து குடித்தும், தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-04-24 23:30 GMT
வேலூர்,

வேலூர் பெரியஅல்லாபுரம் நாகலிங்கேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், லாரி டிரைவர். இவருடைய மகள் சவுமியா (வயது 19). வேலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தந்தை சீனிவாசன் இறந்துவிட்டதால் தாய் கவுரியுடன் வசித்து வந்தார்.

இவருடைய உறவினர் மதுரையை சேர்ந்த ராஜரத்தினம். இவருடைய மகன் மாரீஸ்வரன் (27). டிப்ளமோ படித்துள்ள இவர் வேலூரில் வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், சவுமியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மாரீஸ்வரனின் தந்தை ராஜரத்தினம் மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தக பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். பணியில் இருந்தபோதே அவர் இறந்துவிட்டார்.

இதனால் தந்தையின் வேலை தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாரீஸ்வரன் ஏற்கனவே பார்த்த வேலையை விட்டுவிட்டு காத்திருந்தார். இந்த நேரத்தில் அவருடைய தாயும் இறந்துவிட்டார். இதனால் வேலூரில் உள்ள தனது காதலி வீட்டிலேயே அவர் தங்க தொடங்கினார்.

கடந்த 1½ ஆண்டுகளாக சவுமியாவின் வீட்டிலேயே அவர் வசித்து வந்ததாகவும், காதல் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரீஸ்வரனுக்கு அவருடைய தந்தை பார்த்த வேலை வழங்க ரூ.4 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மாரீஸ்வரன் பலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. மேலும் காதலி சவுமியாவின் வீட்டிலும் பணம் கேட்டுள்ளார். அவர்களிடத்திலும் பணம் இல்லை.

இதனால் சவுமியாவின் தாய் கவுரி கிருஷ்ணகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வருவதற்காக நேற்றுமுன்தினம் சென்றுள்ளார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. இந்த தகவல் வேலூரில் இருந்த மாரீஸ்வரனுக்கும், சவுமியாவுக்கும் கிடைத்தது.

பணம் இருந்தால்தான் வேலைக்கு செல்ல முடியும், வேலை கிடைத்தால்தான் திருமணம் செய்து நிம்மதியாக வாழமுடியும் என்று காத்திருந்த அவர்கள் பணம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதற்காக வெளியே சென்ற மாரீஸ்வரன் விஷம் மற்றும் பீர்பாட்டிலை வாங்கி வந்துள்ளார். வீட்டில் வைத்து பீருடன் விஷத்தை கலந்து குடித்துள்ளார். சவுமியா தூக்குப் போட்டு கொண்டார்.

ஊருக்கு சென்றிருந்த கவுரி நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூருக்கு வந்துள்ளார். அப்போது கதவை தட்டியும் நீண்டநேரமாக கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் வந்து ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றபோது சவுமியா தூக்கில் பிணமாக தொங்கியபடி உள்ளார். மாரீஸ்வரன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றி பாகாயம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சென்று சவுமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்