‘தினத்தந்தி’ - ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் மே 1-ந்தேதி நடக்கிறது

‘தினத்தந்தி’யும், ‘வேல்ஸ் பல்கலைக்கழகமும்’ இணைந்து ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் வருகிற மே 1-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடத்துகிறது.

Update: 2018-04-24 23:00 GMT
சென்னை, 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்கு வசதியாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ‘தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனம் ஏற்கனவே 16 ஆண்டுகள் நடத்தி முடித்துவிட்டன.

இந்த ஆண்டு 17-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில், ‘தினத்தந்தி’ நிறுவனம், ‘வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன்’ இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

இலவசமாக பங்கேற்கலாம்

‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற மே 1-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவுசெய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாணவர்களுடன் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

ஐ.பி.எஸ். அதிகாரி

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை மே 1-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு தலைமை ஏற்று தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், மாணவ- மாணவிகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்களும், வல்லுனர்களும் எடுத்துரைப்பார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம். எந்த மேற்படிப்பு படிக்கவேண்டும், எப்படி வேலைவாய்ப்பை பெறமுடியும் என்று மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கல்வியாளர்களின் விளக்க உரை அமையும்.

இலவச புத்தகம்

‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. 128 பக்க அளவில் பல்வேறு தகவல்களுடன் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்புக்கு பிறகு மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி மற்றும் மேற்படிப்பு விவரங்கள் முழுமையாக இதில் வழங்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் சேருவதற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது. இந்த வெற்றி நிச்சயம் புத்தகம் உயர்கல்வி என்ற கடலில் நீந்த உள்ள மாணவ- மாணவிகளை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கும்.

பஸ் வசதி

நிகழ்ச்சி நடைபெறும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்ல இலவசமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் காலை 7 மணியில் இருந்தே விடப்படுகின்றன.

அதாவது அயனாவரம், முகப்பேர், வடபழனி, கோயம்பேடு, பொன்னேரி, செங்குன்றம், அம்பத்தூர், பெரம்பூர், மூலக்கடை, திருவொற்றியூர், மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, அடையாறு, பட்டினம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், வள்ளுவர்கோட்டம், படப்பை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், போரூர், பூந்தமல்லி, குன்றத்தூர், மகாபலிபுரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இருந்து மாணவர்கள் வருவதற்கு ஏற்றபடி பஸ்கள் விடப்படுகின்றன. மாலையில் நிகழ்ச்சி முடிந்ததும் பல்கலைக்கழகத்தில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல பஸ்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளன.

மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு, காலை, மாலை தேநீர், குளிர்பானம், பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் குறிப்பு எடுப்பதற்கு பேனா, குறிப்பேடு அடங்கிய போல்டர் வழங்கப்படும். 

மேலும் செய்திகள்