படப்பை அருகே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க கோரிக்கை

படப்பை அருகே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-04-29 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சாலமங்கலம் கிராமத்துக்கு செல்லும் முக்கிய சாலையின் ஓரம் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.

பவானி நகர், நரியம்பாக்கம், பஜனைகோவில்தெரு, சிவன் கோவில்தெரு, செல்லியம்மன் தெரு, வி.ஐ.பி. நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

பலத்த காற்று வீசும்போது ஆபத்தான நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் எந்த நேரத்திலும் கீழே சாய்ந்து விழும் நிலை காணப்படுகிறது. இதன் அருகிலேயே சமுதாயக்கூடம், கோவில்கள், குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே விபரீத சம்பவங்கள் நடைபெறும் முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள சிமெண்டு கம்பங்களை உடனடியாக மாற்றி டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்