சூரிய ஒளி மூலம் மின்உற்பத்தி செய்யும் சாதனங்கள் வினியோகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சூரிய ஒளியின் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் சாதனங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2018-04-29 22:45 GMT
திருவள்ளூர்,

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசின் வாயிலாக, மத்திய அரசு 30 சதவீதம் மானியத்துடன் கூடிய சூரிய ஒளியின் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் சாதனங்களை கட்டிடங்களின் மேற்கூரையில் அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் சூரிய மின்உற்பத்தி சாதனங்களின் மூலம் அனைத்து மின்சாதனங்களையும் இயக்கலாம். உதாரணமாக ஒரு கிலோ வாட் சூரிய மின்சாதனம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும்.

இதில் நுகர்வோரின் பயன்பாடு தவிர்த்து மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்துக்கு நிகர அளவி மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கு ஏற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் அமைத்து பயன்பெறலாம்.

இந்த மானியம் பெறுவதற்கு அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தனி நபர் அல்லது நிறுவனங்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம்.

மேலும் அலுவலக நேரங்களில் பிரிவின் உதவி பொறியாளரை நேரடியாகவும், 7708064723, 7708064631 ஆகிய செல்போன்கள் மூலமும், tlr@teda.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், சூரிய மின்சக்தி ஆற்றல் உற்பத்தி மற்றும் மானியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் www.teda.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்