கூடலூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது

கூடலூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-29 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் திருடர்கள் தங்களது கைவரிசையை காண்பித்துவிட்டு, தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காந்திநகர், சூண்டி உள்பட பல கிராமங்களில் பட்ட பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் தொடர் திருட்டு போனதாக நியூகோப் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து நியூகோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், நசீர், ஏட்டு சத்தியசீலன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே ஆரோட்டுப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையொட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஊட்டி அருகே தேனாடுகொம்பை இந்திரா நகரை சேர்ந்த சங்கர் (வயது 46) எனவும், பல வீடுகளின் பூட்டை உடைத்து டி.வி.டி. பிளேயர், ரூ.2 ஆயிரம் பணம், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரிய வந்தது.

மேலும் டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து கொள்ளையடித்தல் உள்பட பல திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ஊருக்குள் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்