‘அவன்- இவன்’ சினிமா பாணியில் சாமிக்கு கிடா வெட்டி பூஜை செய்த போலீஸ்காரர்கள்

‘அவன்- இவன்’ சினிமா பாணியில் சாமிக்கு கிடா வெட்டி போலீஸ்காரர்கள் பூஜை செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

Update: 2018-04-29 23:00 GMT
பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் நெம்மாறையில் வல்லங்கி திருவிழா நடைபெற்றது. இந்த விழா கேரளாவில் புகழ்பெற்றதாகும். இந்த விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும், துஷ்ட தேவதைகளால் கலவரம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுதல் வைப்பார்கள். அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றால் கருப்பசாமிக்கு கிடா வெட்டி கோவிலில் விருந்து சாப்பிடுவார்கள்.

கடந்த மாதம் நடைபெற்ற திருவிழாவில் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடை பெறவில்லை. இதனால் கிடா விருந்து நடைபெற்றது. விருந்தில் பங்கேற்க சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் வந்தார். சீருடை அணியாமல் போலீஸ்காரர்கள் பூஜை செய்தனர். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்த பின்னர் தான் கிடா விருந்து நடத்துபவர்கள் போலீசார் என்று அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

துஷ்ட தேவதைகளால் குற்றச்சம்பவம் நடைபெறாமல் இருக்க ‘அவன்- இவன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சாமிக்கு கிடா வெட்டி பூஜை செய்வார். இந்த காட்சி சினிமாவில் ரசிக்கும்படி இருந்தது. இதுபோன்ற சம்பவம் கேரளாவில் நடைபெற்றதால் பொதுமக்களில் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதசார்பற்று சட்டத்தின் படி இயங்க வேண்டிய போலீசார் கிடா விருந்து உள்ளிட்ட மதம் சம்பந்தப்பட்ட எந்த விழாவும் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மீறி போலீசார் கிடா வெட்டி பூஜை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரதீஸ்குமார், ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாஸ், பாலக்காடு சிறப்பு டி.எஸ்.பி. செய்தாலி ஆகியோரை அழைத்து நெம்மாறை போலீசார் கருப்பசாமிக்கு கிடா வெட்டி பூஜை நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் கிடா பூஜை உண்மை என்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. கூறினார். 

மேலும் செய்திகள்