துவரங்குறிச்சியில் தடுப்புச்சுவரில் மோதியதில் ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 25 பயணிகள் படுகாயம்

துவரங்குறிச்சியில் தடுப்புச்சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.

Update: 2018-04-29 22:15 GMT
துவரங்குறிச்சி, 

சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசி நோக்கி சுமார் 49 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த நயினார் ஓட்டினார்.

அந்த பஸ் நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நகருக்கு பிரியும் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் ஆம்னி பஸ் மீது மோதுவது போல் வந்தது.

இதனால் ஆம்னி பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு கண் விழித்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினர்.

இந்த விபத்தில் மொத்தம் 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி, மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதில் ராபர்ட்(வயது 31), கபில்(23), மாரியப்பன்(23), மாரித்துரை, ராஜ்குமார், வள்ளியம்மாள், பிரீத்தி, லட்சுமி, செல்வராஜ், சம்சுதீன், ரசூல் மற்றும் மாணிக்கவாசகம், சண்முகராஜு, செல்வராஜ், அஜித் உள்பட 25 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்