காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த ‘பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை’: எடப்பாடி பழனிசாமி பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-04-29 23:15 GMT
சேலம், 

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம், “காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சி விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானத்திலே, அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சி விவசாயப் பிரதிநிதிகளும் ஒன்றாக சேர்ந்து பாரதப் பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானத்தை பாரதப் பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.

எங்களுக்கு நேரம் கொடுங்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் உங்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரவேண்டும் என்று ஏற்கனவே கடிதம் அனுப்பினோம், நினைவூட்டுக் கடிதமும் அனுப்பினோம். இதுவரை எங்களுக்கு பதில் வரவில்லை.

இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு, 6 வார காலத்திற்குள் மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வுகாணவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு வழங்கியது. அதன் பிறகு 6 வாரம் காலத்திற்கு பிறகு அதை நிறைவேற்றவில்லை. ஆகவே உடனடியாக நாம் சீராய்வு மனுவை தாக்கல் செய்தோம். அதன் அடிப்படையிலே சுப்ரீம் கோர்ட்டு, வருகிற மே மாதம் 3-ந் தேதிக்குள் மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு வழங்கியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்