கள்ளக்குறிச்சி கோவில் தேரோட்டத்தில் கத்தியால் குத்தி பெண் கொலை

கள்ளக்குறிச்சி கோவில் தேரோட்டத்தின் போது கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-04-29 23:15 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கோவில் தேரோட்டத்தின் போது கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கத்தியால் குத்திய வாலிபரை அங்கிருந்த பக்தர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் இளையாழ்வார். இவரது மனைவி குமுதம்(வயது 60). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு இளையாழ்வார் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார்.

இந்த நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக குமுதம் கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்தார். புதுச்சேரி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகே தேர் வந்து கொண்டிருந்தபோது, அதற்கு முன்பாக குமுதம் நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமுதத்தின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பக்தர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த குமுதத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமுதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே பிடிபட்ட வாலிபரை பக்தர்கள் கள்ளக் குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்குறிச்சி கவரை தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் குமார்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குமாரின் சித்தப்பா கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் குமுதத்துக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு குமார், குமுதத்தை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றனர்.

கோவில் தேரோட்டத்தின் போது கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்