ஜனார்த்தன ரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு கிடையாது எடியூரப்பா சொல்கிறார்

ஜனார்த்தன ரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கு தொடர்பு கிடையாது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2018-04-29 22:46 GMT
பெங்களூரு, 

ஜனார்த்தன ரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கு தொடர்பு கிடையாது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று கலபுரகியில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தோல்வி அடைவது உறுதி

சித்தராமையாவுக்கு தலை கெட்டுவிட்டது. அதனால் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று காட்டட்டும். அவர் 2 தொகுதியிலும் தோல்வி அடைவது உறுதி. அவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும்.

தனக்கு மராட்டிய மொழி பேச வராது, இதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று பிரசாரத்தின்போது சித்தராமையா பேசி இருக்கிறார். கன்னட மண்ணில் இருந்து கொண்டு சித்தராமையா கன்னடர்களை அவமதித்துவிட்டார். உடனே மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த தொடர்பும் கிடையாது

ரேவுநாயக் பெலமுகிக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. அவர் எங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டார். அதனால் நாங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஸ்ரீராமுலுவும், ஜனார்த்தனரெட்டியும் நண்பர்கள். அதனால் அவரை ஆதரித்து ஜனார்த்தனரெட்டி பிரசாரம் நடத்துகிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்

அதைத்தொடர்ந்து கல புரகியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசுகையில், “தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடி முன்னிலையில் மே மாதம் 17 அல்லது 18-ந் தேதி நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன். பதவி ஏற்பு விழாவில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். ஷாதி பாக்ய திட்டம் தற்போது முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து சமுதாய பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தேர்தலில் காங்கிரசை நிராகரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். புதிய கர்நாடகத்தை கட்டமைக்க மக்கள் ஆதரவு வழங்குவார்கள். பிரதமர் மோடி பிரசாரம் செய்ய தொடங்கியதும் பா.ஜனதாவுக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யும்“ என்றார்.

மேலும் செய்திகள்