சங்க கால புலவர்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

சங்க கால புலவர்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2018-04-29 23:04 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ் கவிஞர்கள் தினவிழா மற்றும் ஒக்கூரில் வாழ்ந்த சங்க கால புலவர் மாசாத்தியார் நினைவு தூணிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பசும்பொன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, சங்க புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவு தூணில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள், தமிழ் கவிஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் பெருமைக்குரிய சங்க புலவர் ஒக்கூர் மாசாத்தியாரை போற்றும் வகையிலும், அவரது நினைவு தூணில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் மொழிக்கு பெருமை தேடித்தந்தவர் மாசாத்தியார்.

தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொரு சங்க கால புலவர்களையும் நினைக்க வேண்டும். அவர்களை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபங்களும், நினைவுத்தூண்களும் கட்ட உத்தரவிட்டு அதன்படி ஒவ்வொரு ஆண்டும் புலவர்களை கவுரவப்படுத்தும் விதமாக கவிஞர்கள் தினவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்