தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள்

தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும்.

Update: 2018-04-30 07:51 GMT
உலகம் கணினிமயமாகி வந்ததையொட்டி, உலகில் உள்ளவர்கள் தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் தொடர்பான பல அடிப்படை கல்விகளை இணையதளம் வழியே கற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது ‘தமிழ் இணைய கல்விக்கழகமாக (தமிழ் விர்ச்சுவல் அகடமி)’ செயல்பட்டு வருகிறது.

தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும். தமிழ்மொழி, பாரம்பரியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும். கணினி நிரல் எழுதுபவர்கள், மொழி அறிஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 50 பேர் இணைய தள மேம்பாடு மற்றும் கல்விப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தமிழ் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருக்களை வழங்குதல், சில தமிழ் மென்பொருட்களை உருவாக்குதல், நூல்கள், கலைச்சொற்கள், சுவடிகளை இணைய மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை இணைய கல்விக் கழகம் கவனிக்கிறது. பன்னாட்டு மாணவர்களுக்கு இணையம் வழி தமிழ் கற்பித்தல் பயிற்சியும் வழங்குகிறது.

தமிழ் மொழி, கலாச்சாரம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

கணினி தொழில்நுட்பம் பற்றிய தமிழ் அறிமுகம் இணையத்தில் கிடைக்கிறது. தமிழ் கற்க விரும்புபவர்களுக்கு மழலைகளுக்கான பயிற்சி, அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக மேற்சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம். பட்டப்படிப்பு அளவிலான இளநிலை தமிழியல், மொழிபெயர்ப்பியல் போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.

அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயிலாதவர்கள் இணைய பல்கலைக்கழகம் வழங்கும் பயிற்சி வழியாக தமிழையும், தமிழ்ச்சமூகத்தையும் அறியலாம்!. இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tamilvu.org/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்