சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியவில்லை

3 முறை முயற்சித்தும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாப்பிரியா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-05-04 23:00 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாப்பிரியாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு அவர் ஆணையத்துக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவை பார்த்தீர்களா? என்று நீதிபதி கேட்டதற்கு, ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக 3 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். அந்த சமயத்தில் நான் ஓய்வு பெற்று விட்டதால் எனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால், என்னால் ஜெயலலிதாவை நேரில் பார்க்க இயலவில்லை. அவர் இறந்த பின்பு ராஜாஜி அரங்கில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்’ என்றார். சுமார் ½ மணி நேரம் இவரிடம் விசாரணை நடந்தது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளையில் வங்கி கணக்கு உள்ளது. அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்ட போது மேலாளராக பணியாற்றிய மகாலட்சுமிக்கு (தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஆணையம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று காலை அவர் ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

அவரிடம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கு தொடர்பாகவும், இளவரசியின் மகன் விவேக்கிற்கு கல்வி கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மகாலட்சுமி பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்