ஒரே நாளில் 224 மி.மீ. மழை; பலத்த காற்றுக்கு வாழைகள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒரே நாளில் 224 மி.மீ. மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் வாழை மரங்கள் சேதமாகின.

Update: 2018-05-04 23:00 GMT
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதில் நிலக்கோட்டை பகுதியில் 4 வீடுகள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கி 1 மணி நேரம் பலத்த காற்றுடன், மழை பெய்தது. திண்டுக்கல், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 224 மி.மீ. மழை பெய்தது. அதில் திண்டுக்கல் நகரில் அதிகபட்சமாக 49.8 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வாக பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு, நாகல்நகரில் சில வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே காற்றுடன் பெய்த மழைக்கு பாண்டியன்நகர், ஆர்.எம்.காலனி, நேருஜிநகர், நாகல்நகர், கோவிந்தாபுரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு உள்பட நகரில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில வீடுகள் மீதும் மரங்கள் சாய்ந்தன. மேலும் பல இடங் களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

மரங்கள் சாய்ந்ததில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போதிலும், உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. இதனால் பஸ் நிலையம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. மேலும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மின்சாரமின்றி மக்கள் தவித்தனர்.

ரெட்டியார்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் பெய்த மழையால், வாழை மரங்கள் சேதமாகின. இதில் கொத்தப்புளி கிராமத்தில் தங்கமணி என்பவரின் தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. அதில் வாழைக்காய் பாதி விளைச்சல் அடைந்த நிலையில் வாழைகள் முறிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேபோல் மூலச்சத்திரம், கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஏராளமான வாழைகள் சேதமாகின. மேலும் காற்றுக்கு சேதமான வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைரோடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 100-க்கு மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்த மரங்களை அகற்றாததால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்றுக்கு 80 மின்கம்பங்கள் சேதமாகின. அவற்றை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடக்கின்றன. எனினும், பெரும்பலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதனால் பல கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. அதன்படி அம்மையநாயக்கனூர், கொடைரோடு, பள்ளபட்டி, மாலையகவுண்டன்பட்டி உள்பட பல கிராமங்களில் மின் தடையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்