இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது

திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்திய இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-04 22:45 GMT
திருச்சி

திருச்சி பாலக்கரை ராஜாபேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெஜினாமேரி(வயது 20). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹக்கீஸ்கான்(21) என்பவரை காதலித்து வந்தார். ஹக்கீஸ்கான் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.

இவர்களுடைய காதல் விஷயம் தெரிந்ததும் இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல்ஜோடி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவை சென்றது. அங்கு இருவரும் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 1 மாதத்திற்கு பின்னர் கோவையில் இருந்து திரும்பி வந்து, திருச்சி சங்கிலியாண்டபுரம் ராஜமாணிக்கம் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்தனர். குடும்ப வாழ்க்கை காரணமாக ரெஜினாமேரி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் ரெஜினாமேரி பிணமாக கிடந்தார். இதையறிந்த அவரது தாய் அனிதாமேரி, தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக பாலக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரெஜினாமேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. காதலன் ஹக்கீஸ்கானை நம்பி வாழ்வை அர்ப்பணித்த ரெஜினாமேரிக்கு, அவர் மதுப்பழக்கம் மற்றும் போதை மாத்திரைக்கு அடிமையாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதனை தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அவர் உயிரை மாய்த்து கொண்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக ரெஜினாமேரியின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதால், சந்தேக மரணம் என பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், அதனை மாற்றி ரெஜினாமேரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து காதலன் ஹக்கீஸ்கானை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஹக்கீஸ்கான், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்