வால்பாறையில் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் சாவு

வால்பாறையில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-04 22:30 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள சின்கோனா எஸ்டேட் 6-வது பிரிவு பத்தாம்பாத்தி குடியிருப்பை சேர்ந்த தோட்ட தொழிலாளி ரவி. இவருடைய மகன் ராஜேஷ்குமார் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் மற்றொரு ரவி. இவருடைய மகன் ராஜேஷ் (19). இவர்கள் 2 பேரும் வால்பாறை அரசு கல்லூரியில் படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலை வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு காலை 6 மணியளவில் மீண்டும் பத்தாம்பாத்தி எஸ்டேட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ராஜேஷ் ஓட்டினார். ராஜேஷ்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார். மோட்டார் சைக் கிள் வால்பாறை குமரன்ரோடு பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி, சாலையில் நடந்து சென்ற வாழைத்தோட்டத்தை சேர்ந்த பாத்திமாபீவீ (76) என்பவர் மீது மோதியது. அதன் பிறகும் நிற்காமல் சாலையின் ஓரத்தில் இருந்த நகராட்சியின் இரும்பு குப்பைத்தொட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதில் ராஜேஷ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த ராஜேஷ், பாத்திமா பீவி ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இருவரும் தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து நடந்த குமரன்ரோடு சாலையில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே இனியாவது வேகத்தடை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்