நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.

Update: 2018-05-04 22:30 GMT
விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் வேளாண்மைத்துறையின் சார்பில் கிராம சுயாட்சி இயக்கம் சார்பில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது தெரிவித்ததாவது:-

விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் புதிய ரகங்களை கண்டுபிடிக்கிறது. விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு ஏற்றார்போல் எந்தமாதிரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம், எந்த மாதிரியான விதைகளை பயன்படுத்தலாம், எந்த மாதிரியான கருவிகளை பயன்படுத்தலாம் என்பதனை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும்.

மேலும், கூட்டுப்பண்ணையம் என்ற புதுமையான திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேளாண்மைத் துறையின் மூலம் அட்மா வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற கன்னித்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சுரேஷ், கோட்டாட்சியர் தினகரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் சாத்தூர் கோட்டாட்சியர் மங்களராமசுப்பிரமணியன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பாராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் சிறப்புரையாற்றினார்.

வேளாண்மை அலுவலர் குமரன், துணை வேளாண்மை அலுவலர் புஷ்பவல்லி, தோட்டக்கலைதுறை அலுவலர் குணசீலி, கால்நடை உதவி மருத்துவர் சுப்புராஜ், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய அதிகாரி ராஜ்குமார், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துசெல்வி ஆகியோர் பேசினர். 

மேலும் செய்திகள்