கலப்பட பொருட்களை கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் - உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தகவல்

கலப்பட பொருட்களை கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தெரிவித்தார்.

Update: 2018-05-04 23:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் கலப்பட பொருட்களை கண்டறிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் கூறினார்.

தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக பணியாற்றிய டாக்டர் ரமேஷ்பாபு புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மாவட்ட அதிகாரி கூடுதல் பொறுப்பாக தஞ்சை மாவட்டத்தையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நகர்நல அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் அருண் பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டார். ஈரோடு காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த இவர் ஈரோடு மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றி பின்னர் நகர்நல அலுவலராக பதவி உயர்வு பெற்றார். தற்போது பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து டாக்டர் அருண் கூறுகையில், “சுற்றுலா தலங்களான தஞ்சை பெரியகோவில், சுவாமி மலை கோவிலில் பொதுமக்களிடம் கலப்பட உணவுப்பொருட்களை கண்டறிவது குறித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்லூரிகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

தற்போது மாம்பழசீசன் என்பதால் ரசாயனக்கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து பழக்குடோன்களில் சோதனை நடத்த உள்ளோம். தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்து சோதனை செய்ய உள்ளோம். கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் உரிய முறையில் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்த உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்