கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன.

Update: 2018-05-04 22:36 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், சோளிங்கர், வாணியம்பாடி, காட்பாடி, வேலூர், மேலாலத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடின.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் முன்பு உள்ள விளையாட்டு மைதானம், நேதாஜி விளையாட்டு மைதானம் உள்பட வேலூர் மாநகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தன.

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேப்பமரம், கோட்டையில் உள்ளே 3 மரங்களின் கிளைகள் மற்றும் மக்கான் சிக்னல் அருகேயுள்ள கோட்டை பூங்காவில் ஒரு மரம், தீயணைப்பு நிலையம் அருகே ஒரு மரம், புதிய பஸ் நிலையத்தில் ஒரு மரம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

வேலூர் மாவட்டம் மேலாலத்தூரில் அதிகபட்சமாக 60.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்- 37.8, சோளிங்கர்- 36, குடியாத்தம்- 34.2, ஆலங்காயம்- 12, ஆம்பூர்- 11, வாணியம்பாடி- 8.3, திருப்பத்தூர்- 5.3. 

மேலும் செய்திகள்