தொழுகை நடத்துவதில் பிரச்சினை; இருதரப்பினர் இடையே மோதல்

தொழுகை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2018-05-04 23:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தொழுகை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் கட்டிமேடு ஆதிரெங்கம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தினமும் தொழுகை நடத்துவது வழக்கம். பள்ளிவாசலில் நீண்ட நாட்களாக ஹஸ்ரத்தாக(தொழுகை நடத்துபவர்) அப்துல்ஜப்பர் என்பவர் தொழுகை நடத்தி வருகிறார். இவர் தொழுகை நடத்துவதில் முரண்பாடு உள்ளதாக கூறி ஒரு தரப்பினர் இவர் தொழுகை நடத்தக்கூடாது என கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் இவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இரு தரப்பினரும் திருத் துறைப்பூண்டி போலீசில் மாறிமாறி புகாரும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூர் வக்பு வாரியம் புதிய ஹஸ்ரத்தை (தொழுகை நடத்துபவர்) நியமித்து கொள்ள கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் தொழுகைக்காக புதிய ஹஸ்ரத் ரபிக் வந்துள்ளார். அப்போது பழைய ஹஸ்ரத் அப்துல்ஜப்பர் தொழுகையை முன்னதாகவே தொடங்கியதாக கூறி இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக்தாவுது படுகாயம் அடைந்தார்.

இதனால் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறாா.் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்