ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுகள்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். நாராயணி பீடத்தின் வெள்ளி விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

Update: 2018-05-04 22:39 GMT
வேலூர்,

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நேற்று நடந்தது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தங்கக்கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் தனது மனைவி சவிதாகோவிந்துடன் நட்சத்திர பாதை வழியாக பேட்டரி காரில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டார். அங்கு அவர்களுக்கு சக்தி அம்மா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜனாதிபதி மரக்கன்று நட்டார். அதைத்தொடர்ந்து சக்திஅம்மா தலைமையில் நடைபெற்ற மகாலட்சுமி யாகத்தில், ஜனாதிபதி, கவர்னர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சக்திஅம்மா ஆசி வழங்கினார். பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், முன்னாள் எம்.பி. இல.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடந்தது. புதிய சிகிச்சை பிரிவுகளை ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் திறந்துவைத்தார். கவர்னர் பன்வாரிலால்புரோகித் மற்றும் ஜனாதிபதியின் மனைவி சவிதாகோவிந்த் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களை சக்திஅம்மாவின் தாயார் ஜோதியம்மாள், சக்திஅம்மாவின் வெளிநாட்டு பக்தர் லின்ஸிஸ்நெய்டர், மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர்கள் கலையரசு, ராமலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். அங்கும் மரக்கன்று நடப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்