அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான தளவாடப்பொருட்கள்

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்களை அசோக்குமார் எம்.பி. வழங்கினார்.

Update: 2018-05-04 22:53 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டில், மெத்தை, ஸ்டெரச்சர், வீல் சேர் என ரூ.13 லட்சம் மதிப்பிலான தளவாடப்பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன. இதையடுத்து 100 கட்டிகள், 100 மெத்தைகள், 10 ஸ்டெரச்சர், 10 வீல்சேர் ஆகியவை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் அசோக்குமார் எம்.பி. கலந்துகொண்டு ரூ.13 லட்சம் மதிப்புள்ள கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசியதாவது.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு ரூ.5 கோடி நிதி வழங்குகிறது. ரூ.1 கோடி மதிப்பில், மாவட்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மையத்திற்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவமனைக்கான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், டாக்டர் செந்தில்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் பரமசிவம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்