தலைவாசல் அருகே விவசாயி கொலை: ‘நிலத்தகராறில் சாபம் விட்டதால் அரிவாளால் வெட்டினேன்

விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-05-04 23:01 GMT
தலைவாசல்,

தலைவாசல் அருகே விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நிலத்தகராறில் அடிக்கடி சாபம் விட்டதால் அரிவாளால் வெட்டிக்கொன்றேன், என கூறி உள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 70). விவசாயி. இவரது மனைவி சின்னக்கா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சின்னக்கா இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயராமன், பாலு ஆகிய மகன்களும், செல்வம் என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் ராஜமாணிக்கம் தனது விவசாய தோட்டத்தில் கட்டில் போட்டு படுத்து இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு வாலிபர் அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். இதில் ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜமாணிக்கம் கொலை தொடர்பாக பெரியசாமி (55) என்பவரும், அவருடைய 17 வயது மகனும் போலீசில் சரண் அடைந்தனர். பெரியசாமியின் நிலமும், ராஜமாணிக்கம் நிலமும் அடுத்தடுத்து உள்ளது. நிலத்தகராறில் இந்த கொலை நடந்துள்ளதும், கொலைக்கு பெரியசாமி தூண்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியையும், அவருடைய மகனையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான பெரியசாமியின் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்களுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. தோட்டத்தின் பாதையில் வரும்போதும், போகும்போதும் ராஜமாணிக்கம் சாபம் விடுவார். இது எங்களுக்கு வேதனை அளித்தது. இந்த நிலையில் எனது அண்ணிக்கு ஆண் குழந்தை பிறந்து நேற்று முன்தினம் காலையில் இறந்து விட்டது. இதற்கு காரணம் ராஜமாணிக்கம் விட்ட சாபம் தான் என நினைத்து ஆத்திரம் அடைந்தேன். எனவே அரிவாளை எடுத்துக்கொண்டு ராஜமாணிக்கத்தின் நிலத்துக்கு சென்றேன். அங்கு அவர் கட்டில் போட்டு படுத்து இருந்தார். அவரை அரிவாளால் வெட்டினேன். இதை அறிந்ததும் ராஜமாணிக்கத்தின் பேத்தி தடுப்பதற்காக வந்தாள். அரிவாளால் அவளை மிரட்டி அங்கிருந்து விரட்டினேன். பின்னர் தலைவாசல் போலீசில் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பெரியசாமியை சேலம் மத்திய சிறையிலும், அவரது மகனை சேலத்தில் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர். நிலத்தகராறில் சாபம் விட்ட விவசாயியை வாலிபர் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்