நீதிபதிகள், அதிகாரிகளுக்கு மீண்டும் வீடு வழங்க தடை குறித்து பரிசீலனை

அரசு திட்டத்தில் ஏற்கனவே வீடு ஒதுக்கப்பட்டு இருக்கும்நீதிபதிகள், அதிகாரிகளுக்கு மீண்டும் வீடு வழங்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு பதில் அளித்தது.

Update: 2018-05-04 23:37 GMT
மும்பை,

மும்பை ஒஷிவாரா பகுதியில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மாநில அரசு திட்டமிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியிருப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் இந்த திட்டத்துக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மும்பை ஐகோர்ட்டில் இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நீதிபதிகள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு பணி மாறுதலில் சென்ற நீதிபதிகள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கு நீதிபதி பவாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே மராட்டியத்தில் அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு மீண்டும் வீடு வழங்கக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் அசுதோஷ் கும்பகோனி, மராட்டியத்தில் ஏற்கனவே அரசு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு இருக்கும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு மீண்டும் வீடுகள் வழங்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து அரசின் கருத்தை வரவேற்ற நீதிபதிகள் எந்தவொரு தனி நபரும் தனது பதவியை பயன்படுத்தி ஆதாயம் அடையக்கூடாது என கூறி வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்