உலகின் மிகப் பெரிய விமானம்!

உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2018-05-05 07:27 GMT
‘ஸ்டிராட்டோலாஞ்ச்’ என்ற பெயர் கொண்ட இந்தப் பிரம்மாண்ட விமானத்தை வடிவமைத்தவர் பால் ஆலன். இவர் பிரபல கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர்.

பால் ஆலன் வடிவமைத்திருக்கும் விமானம், அனைத்து விதங்களிலும் மற்ற விமானங்களில் இருந்து வித்தியாசமானதாக அமைந் திருக்கிறது. இதன் இறக்கைகள், கால்பந்து மைதானத்தை விடப் பெரியவை. அவற்றின் நீளம், 385 அடி.

இரண்டு விமானி அறைகளைக் கொண்ட இவ்விமானம், 28 சக்கரங்கள், ஆறு என்ஜின்கள் உடையது.

ஒவ்வொரு என்ஜினின் எடையும் 4 ஆயிரம் கிலோ. ஒவ்வோர் என்ஜினும், 6 ‘போயிங் 747’ விமானத்தின் என்ஜின் திறனுக்குச் சமமாக உள்ளன.

இது பெரிய விமானம் என்பதால், இதற்கு இரண்டு விமான உடற்பகுதிகள் உள்ளன. இரண்டிலும் ஒவ்வொரு விமானி அறை உள்ளது.

ஆனால் வலது பக்கத்தில் உள்ள பகுதியில்தான் விமானி, இணை விமானி, என்ஜினீயர் ஆகியோர் இருப்பார்கள். அவர்களே விமானத்தைச் செலுத்துவர். இடதுபுறம் உள்ள விமானி, கண்காணிப்பை மட்டுமே மேற்கொள்வார்.

இந்த விமானத்தின் மொத்த எடை 2 லட்சத்து 26 ஆயிரம் கிலோ. இது, 6 லட்சம் கிலோ எடை சரக்குகளை ஏற்றிச்செல்லும் திறன் பெற்றது.

விண்வெளிக்கு செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து ராக்கெட்டாகவும் இந்த விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.மேலும், விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு சரக்குகள் எடுத்துச்செல்லவும் பயன்படும்.

இதன் மூலம் விண்வெளி வீரர்கள், பூமியின் உயரமான சுற்று வட்டபாதைக்குச் செல்ல முடியும்.

அமெரிக்காவின் கொலராடோவில் நடந்த 34-வது விண் வெளிக் கருத்தரங்கில், ‘ஸ்டிராட்டோலாஞ்ச்’ விமானத்தின் முதல் பயணம், சில மாதங்களில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த விமானத்தின் இரண்டு கட்ட சோதனைப் பயணம் முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட சோதனை நடத்தப்படவிருக்கிறது.

இந்த விமானத்தைத் தயாரிப்பதற்கான செலவு ரூ. 2 ஆயிரம் கோடி என கடந்த 2011-ம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. தற்போது உண்மையில் எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற விவரம் வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்